எங்கள் வீட்டுத்தோட்டம் 2015
மாடியில் தொட்டியில் வைத்த துவரைச்செடிகளும் தட்டைச்செடிகளும் கீழே வைத்த துவரைச்செடிகளும் மிக நன்றாக வளர்ந்து நிறைய காய்கள் தந்தன. பச்சை துவரைப்பருப்பு குழம்பு மிக ருசியாக இருக்கும்.
| துவரை - மாடியில் |
| துவரை - கீழே |
மாடியில் பிளாஸ்டிக் சீட் விரித்து அதில் வைத்த புதினா செடிகள் தளதளவென்று வளர்ந்து தொடர்ந்து பயன் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
தொட்டியில் வைத்த மாமரத்தில் நன்றாக பூ எடுத்தது. மிகச் சிறியதாக சில பிஞ்சுகளும் காய்த்தன. ஆனால் சில நாட்களில் எல்லாப்பூக்களும் பிஞ்சுகளும் உதிர்ந்துவிட்டன. இனி அடுத்த வருடம் வரை காத்திருக்கவேண்டும்.
பெரும்பாலும் விதைத்த வெள்ளரி விதைகள் எல்லாம் முளைத்து விடுகின்றன. காய்களும் விரைவில் பெரிதாகிவிடுகின்றன. இதில் பறிக்கத் தவறிய ஒரு காய் (ஜுன் 2015ல்) நன்றாக முற்றிவிட்டதால் பழுக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அது பழுத்து வெடித்தபிறகு பறித்தேன். மாவு போல மிக மென்மையாக இருந்தது. அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டபோது மிகமிக சுவையாக இருந்தது.
அடுத்து செப்டம்பரில் மறுபடியும் வெள்ளரி விதைத்தேன். செடிகள் வேகமாக வளர்ந்து நன்றாக பூ எடுத்தன. ஆனால் மொத்தமாக 7 காய்கள் மட்டுமே கிடைத்தன. அதில் இரண்டை பழுக்க விட்டுவிட்டேன்.
தொட்டியில் வைத்த குட்டை ரக வாழைமரத்தில் ஒரு குலை அறுவடை செயதாகிவிட்டது. 32 பழங்கள் தான் கிடைத்தன. ஆனாலும் மிக ருசியாக இருந்தன.
இது தவிர பச்சை கத்திரிக்காய், ஊதாக் கத்திரிக்காய், வெண்டை, அகத்திக்கீரை, தக்காளி, பாகற்காய், முருங்கை போன்றவையும் இந்த வருட பயிர்கள்.
| முருங்கை, அகத்தி |
டிசம்பர் மூன்றாம் வாரத்தில் மீண்டும் மாமரமும் திராட்சைக்கொடியும் பூ எடுக்க ஆரம்பித்துவிட்டன. விளைச்சலை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.